நான் பிரதமராக இருந்திருந்தால், அதை குப்பையில் போட்டிருப்பேன்: ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றதில் இருந்து ராகுல்காந்தி கூடுதல் உற்சாகத்துடன் கட்சிக்காக பணியாற்றி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூறி வருகின்றனர். பாஜக அரசையும் பிரதமர் மோடியின் திட்டங்களையும் ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வருகின்றார். இருப்பினும் சமீபத்தில் நடந்த மூன்று மாநில தேர்தலில் காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியாதது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜகவின் திட்டங்களை குறிப்பாக பண்மதிப்பிழப்பு திட்டத்தை அவர் கடுமையாக சாடினார். 'நான் பிரதமராக இருந்திருந்து என் முன்னே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பரிந்துரை ஆவணம் வந்திருந்தால், அதை தூக்கி குப்பையில் போட்டிருப்பேன்' என்று அவர் ஆவேசமாக தெரிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கிய முதல் நாள் முதல் ராகுல்காந்தி இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.