மாட்டிறைச்சி வைத்திருந்தவருக்கு 3 ஆண்டு சிறை; 10 ஆயிரம் அபராதம்
குஜராத் மாநிலம் சூரத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்த நபருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்தியில் பதவியேற்ற மோடி அரசு, பசுவதைத் தடுப்பு பெயரில் மாட்டிறைச்சியை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை, குறிப்பாக தலித் மற்றும் சிறுபான்மையினரை ஒடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது.
குஜராத், மஹாராஷ்டிரம் உள்ளிட்ட பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பசுவதைத் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள்; விற்பவர்கள் அல்லது மாட்டிறைச்சியை உண்பர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்திலுள்ள தேவ்தா கிராமத்தில் கடந்த 2014 அக்டோபர் 8ஆம் தேதியன்று ரபீக் என்பவர் இரண்டு பைகளில் 20 கிலோ மாட்டிறைச்சி வைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது விலங்கு பராமரிப்பு சட்டம் உள்ளிட்ட ஏராளமான சட்டங்களின் கீழ் வழக்கும் தொடர்ந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை காந்தேவி நீதிமன்றத்தில் நீதிபதி சிஓய்.வியாஸ் முன்பாக நடைபெற்றது. வழக்கைவிசாரித்த நீதிபதி, குற்றவாளி ஏழை என்பற்காக அவரின் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது என்று கூறி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.