திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

கங்கையை தூய்மைப்படுத்த ஏலம் விடப்படும் பிரதமரின் பொருட்கள்

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் கங்கையை தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கென ஒரு தனி அமைச்சகமும் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வந்த பரிசுப் பொருட்களை இணையத்தின் மூலம் ஏலம்விடப்பட்டு அதில் கிடைக்கும் பணத்தை கங்கையை சுத்தப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் தலைப்பாகை, சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் உள்பட 1800-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் வந்தன. இந்த பரிசுப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த பரிசுபொருட்களை இம்மாதம் ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ஏலத்தின் மூலம் கிடைக்கும் பெரும் தொகை, கங்கையைத் தூய்மைப்படுத்தும் புனிதமான திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் முதலில் காட்சிக்கு இணையத்தில் வைக்கப்படும் இந்த பரிசுப் பொருட்களின் ஏல தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.