நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள் : சந்திரபாபு நாயுடு பேச்சு
சமீபத்தில் தேசிய அரசியலில் கவனம் செலுத்திய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்தார். பாஜவை வீழ்த்தியே தீர வேண்டுமென பல மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்றார். சந்திரபாபு நாயுடுவின் இம்முயற்சி இந்திய அரசியலில் அதிகம் பேசப்பட்டது. விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்றைய தினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாகவே ஆந்திராவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. ஆந்திர மாநில மக்கள் தொகையில் 50 % பேர் இளைஞர்களே உள்ளனர். மக்கள் தொகை குறைவால் மாநிலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைய நேரிடும்.
ஆதலால் இளைஞர்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்க பெற்றோர் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மாநில அரசு சார்பில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் உள்ளாட்சி தேர்தலில் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்கள் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.