செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (15:33 IST)

கோ பேக் மோடி – தமிழகத்தை அடுத்து ஆந்திராவிலும் எதிர்ப்பு

பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து ஆந்திர மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே கூட்டணிக்கு ஒத்துக்கொண்டார் சந்திரபாபு நாயுடு. ஆனால் தேர்தலுக்குப் பிறகும் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி பாஜக கூட்டணியில் இருந்து வெளியில் வந்தார்.

கூட்டணியை விட்டு வெளியில் வந்ததும் நாடாளுமன்றத்தில் பாஜக மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர் தெலுங்குதேச எம்.பி.கள். அதனால் தெலுங்கு தேச எம்.பி.கள் மற்றும் எம்.எல்.ஏ.கள் மீது வருமான வரி சோதனை, சிபிஐ விசாரணை ஆகியவற்றை ஏவி அடக்கப் பார்த்தது பாஜக.

அதனால் கோபமான சந்திரபாபு நாயுடு, பாஜக வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த அவர் பாஜக வுகு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் காங்கிரஸோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

இதையடுத்து தற்போது ஜனவரி 6 ஆம் தேதி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த வேண்டுமென சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் மோடியின் வருகைக்கு ஆந்திர மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்னால் வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கருப்புக்கொடி காட்டியதும்  டிவிட்டரில் கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்ததும் குறிப்பிடத்தக்கது.