புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2024 (16:42 IST)

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

நான்கு மகள்களை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உயிர்கள் பலியான சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து ஐந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வசந்த் குன்ச் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சில நாட்களாக ஒரு வீடு பூட்டி இருந்ததாகவும், அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஐந்து சடலங்கள் இருந்தன. ஐந்து பேரும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் சர்மா என்ற 46 வயது நபர் மற்றும் அவரது நான்கு மகள்கள் இருந்தனர் என்றும், செப்டம்பர் 24ஆம் தேதி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சர்மாவின் மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், மகள்களில் இருவர் மாற்றுத்திறனாளிகள் என்பதால் மன உளைச்சலில் இருந்த அவர், நான்கு மகள்களையும் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும் என டெல்லி காவல்துறை கூறியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran