போலி கால் சென்ட்டர் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த 12 பேர் கும்பல் கைது!
நான் வங்கி மேனஜர் பேசுகிறேன்... உங்கள் கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க வேண்டும்.... உங்கள் ஏடிஎம் எண்ணை கூறுங்கள் என்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு தற்போது அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றது. அல்லது உங்கள் வங்கி கணக்கிற்கு ஒரு சிறப்பு சலுகை கிடைத்துள்ளது. அதற்காக ஒரு ஓடிபி எண் அனுப்பியுள்ளோம். அந்த எண்ணை கூறுங்கள் என்றும் ஒருசில அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.
உண்மையில் எந்த வங்கி மேனேஜரும் வங்கி வாடிக்கையாளர்களிடம் இதுபோன்ற தகவல்களை கேட்பதில்லை. இதுகுறித்து பல செய்திகள் வெளிவந்தாலும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இன்னும் சில வங்கி வாடிக்கையாளர்கள் ஏமாந்து கொண்டு இருக்கின்றனர்.,
இந்த நிலையில் டெல்லியில் 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று போலி கால் சென்ட்டர் நடத்தி மக்களின் வங்கி விவரங்களைப் பெற்று கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய அதிர்ச்சி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் அளித்த புகாரை அடுத்து தீவிரமாக களத்தில் இறங்கிய சைபர்க்ரைம் போலீசார் தீவிர விசாரணைக்கு பின் 12 பேர் கொண்ட கும்பலை மொத்தமாக அமுக்கி கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 நகரங்களில் 14 வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களும் 220 பேரை ஏமாற்றி சுருட்டிய 13 கோடி ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகின்றது. இந்த மோசடிக்கு பின்னணி யார், இதுபோன்ற போலி கால் சென்ட்டர் வேறு எங்கும் கிளைகள் அமைத்து செயல்படுகின்றதா? போன்றவை விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்