வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (16:25 IST)

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுக்கும் தலைவர்கள் – குழப்பத்தில் காங்கிரஸ் வட்டாரம் !

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து புதிய தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மூத்த தலைவர்கள் சிலர் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  

இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்தனர். அதோடு ராகுலை சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

ஆனால் ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸுக்கு நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவரைத் தலைவராக்க வேண்டும் எனவும் கூறியதாக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்பட்டது.

இதனை அடுத்து காங்கிரஸின் மூத்த தலைவர்களான ஏ கே அந்தோனி மற்றும் கே சி வேணுகோபால் ஆகியோரிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் அதற்கு மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ கே அந்தோனி தனது உடல்நிலையைக் காரணம் காட்டியும் வேணுகோபால் கர்நாடகாவில் பலமிழந்த காங்கிரஸை மீண்டும் பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபடபோவதாகவும் சொல்லி இதனை மறுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் யாரை தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பத்தில் உள்ளனர்.