திருமணத்திற்கு பயந்து ஓடிய சிறுமி! போலீஸாக திரும்பி வந்த ஆச்சர்யம்!
பீகாரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் சிறுமியை தேடியபோது நடந்த ஆச்சர்ய சம்பவம் வைரலாகியுள்ளது.
பீகார் மாநிலத்தின் முர்சாபூர் பகுதியை சேர்ந்த ஒருவரின் 16 வயது மகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக தெரிகிறது. இதுகுறித்த அந்த சமயம் அளிக்கப்பட்ட புகார் கிடப்பில் கிடந்த நிலையில் சமீபத்தில் எஸ்.ஹெச்.ஓ வாக வந்த அரவிந்த் குமார் என்பவர் இந்த புகாரை எடுத்துள்ளார். அதுகுறித்து காணாமல் போன சிறுமியின் தகப்பனாரிடம் விசாரித்தபோது ஒரு 3 நபர்களை குறிப்பிட்டு அவர்கள்தான் தன் மகளை கடத்தி சென்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்த மூன்று நபர்களையும் விசாரித்த போலீஸாருக்கு கடத்தல் குறித்த துப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தொடர் தேடுதலில் காணாமல் போன சிறுமியே கிடைத்துவிட்டார்.
கடந்த 2018ம் ஆண்டில் 16 வயதில் அந்த சிறுமி இருந்தபோது சிறுமியின் கல்வி ஆசையையும் மீறி அவருக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு தப்பித்து டெல்லி சென்ற சிறுமி அங்கு தங்கி படித்து பல போட்டி தேர்வுகளை எழுதியுள்ளார். சமீபத்தில் டெல்லி கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்று காவலர் பணிக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார் அந்த பெண்.
அந்த பெண்ணை யாரும் கடத்தவில்லை என்று அந்த பெண்ணே அளித்த விளக்கத்தின் பேரில் இந்த புகார் முடித்துவைக்கப்பட்டது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய பெண் காவல் அதிகாரியாக திரும்பி வந்த சம்பவம் அக்கிராமத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Edit By Prasanth.K