காவலர்களுக்கான குஷியான செய்தி – தேர்தல் ஆணையம் அறிவித்த போனஸ் !
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட காவல்துறையினருக்கு தேர்தல் ஆணையம் இனிப்பான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 10ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வந்தது. அன்று முதல் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை வந்தது. அதன் பின்னர் வாக்கு என்ணிக்கை முடிந்த பின் மே 26 ஆம் தேதிதான் விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தேர்தல் பணிகளை மேற்கொண்டது.
இதனால் காவல்துறையினருக்கு சட்டம் ஒழுங்கு பணிகளோடு தேர்தல் பணிகளும் சேர்ந்து கொண்டது. இதனால் மிக அதிகமான வேலைப்பளுவால் காவலர்கள் பாதிக்கபப்ட்டனர். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் ஒரு அறிவிப்பால் இப்போது அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கமாக தேர்தலுக்கு முந்தைய நாள், தேர்தல் நாள், தேர்தலுக்குப் பிந்தைய நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை தினம் என நான்கு நாட்களுக்கு மட்டுமே காவலர்களுக்கு உணவுப்படி வழங்கப்படும். அதிகாரிகளின் பதவிகளுக்கு ஏற்ப இந்த உணவுப்படி மாறும். ஆனால் இந்த முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்தியா முழுவதும் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு உணவுப்படி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் காவல்துறையினர் மகிழ்ந்துள்ளனர்.