19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.. என்ன காரணம்?
19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், அந்த போருக்கு தேவையான பொருட்களை ரஷ்யாவுக்கு அளிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தற்போது 19 இந்திய நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சீனா, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளின் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய இராணுவம் மற்றும் அந்நாட்டின் தொழில் துறைக்கு தேவையான மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை சப்ளை செய்த இந்தியாவின் 19 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து பொருள்களை வாங்க முடியாது மற்றும் விற்பனை செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று இந்தியாவின் அந்த 19 நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva