1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2017 (15:42 IST)

’தேர்தல் முடியும்வரை 5 மாநிலங்களுக்கு திட்டங்கள் அறிவிக்கக் கூடாது' - தேர்தல் ஆணையம் உத்தரவு

சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிக்கும்வரை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கக் கூடாது என்று  மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு கடிதம் எழுதியுள்ளது.


 

வருகின்ற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி, மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், உத்திரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 5 மாநிலத்தில் சட்டசபை தேர்தல்கள் வருகின்ற பிப்ரவரி தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது.

இந்த தேர்தல்கள் பிப்ரவரி 4ஆம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை பல கட்டங்களாக நடக்கிறது. ஆதலால் பட்ஜெட்டை தேர்தல் முடிந்தபின் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “தேர்தல் நடைபெறுவதற்கும், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, பட்ஜெட்டை தள்ளிவைக்க தேவையில்லை'' என்று நேற்று முன்தினம் அறிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் மத்திய அமைச்சரவை செயலாளருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், “சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் எந்த விதமான சலுகைகள், திட்டங்கள் எதையும் மத்திய அரசு அறிவிக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.