திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (11:20 IST)

போதையில் குடும்பத்தையே கொன்று குவித்த இளைஞர்! – டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

டெல்லியில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினரை கொன்று குவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் பாலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு தர்ஷனா என்ற மனைவியும் கேசவ், ஊர்வசி சைனி என்ற மகனும், மகளும் உள்ளனர். 25 வயதான கேசவ் படித்து முடித்தும் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததுடன், குடிபழக்கம், போதைக்கும் அடிமையாக இருந்துள்ளார்.

இதனால் அடிக்கடி அவர் வீட்டில் தகறாரு செய்து வந்த நிலையில் அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து சில நாட்கள் முன்னர்தான் கேசவ் வீடு திரும்பியுள்ளார். ஆனாலும் மீண்டும் போதை பொருட்களை எடுத்துக் கொண்டதுடன், வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.


இப்படியாக நேற்று நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கேசவ் தனது தாய், தந்தை, தங்கை மற்றும் பாட்டி நால்வரையும் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். அவர்கள் கத்தும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே கேசவ் தப்பி ஓட முயன்றுள்ளார்.

கேசவ்வை மடக்கி பிடித்த மக்கள் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் கேசவ்வை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K