காற்று மாசுவால் கட்டுப்பாடு: டெல்லி மெட்ரோவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
டெல்லியில் கடந்த சில நாட்களாக மாசுக்காற்று பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மாசு பிரச்சனைக்கு தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டும் களத்தில் இறங்கியுள்ளது. மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுக்கு பல கட்டுப்பாடுகளை சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள நிலையில் டெல்லி அரசும் பொது மக்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் கடந்த திங்கள் முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஒற்றை எண்களில் முடியும் வாகனங்கள் ஒரு தினமும் இரட்டை எண்களின் முடியும் வாகனங்கள் ஒரு தினமும் என மாறி மாறி வாகனங்களை இயக்கப்பட வேண்டும் என்றும் இந்த விதிமுறைகளை மீறினால் ரூபாய் 4000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவிப்பு செய்தது
இதனையடுத்து டெல்லியில் போக்குவரத்து குறைவதோடு வாகனங்களில் ஏற்படும் புகை போன்ற மாசு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி அரசின் இந்த வாகனம் கட்டுப்பாடு காரணமாக டெல்லி மெட்ரோவில் பயணம் செய்பவர்களின் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது
வாகன கட்டுப்பாட்டிற்கு பின்னர் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில் மட்டும் டெல்லி மெட்ரோ ரயில்களில் 16 சதவீத பயணிகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் டெல்லி மெட்ரோவில் வருமானமும் அதிகரித்துள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது