மோடியுடன் செல்பி எடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்: டெல்லி மெட்ரோ ரயிலில் கலகல!!
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அரசுமுறை பயணமாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருநாடுகள் உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் ஆறு ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
இதன்பின்னர் மோடி, மால்கம் ஆகியோர் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். அப்போது இருவரும் மாறி மாறி செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் கலகலப்பாக்கியது.
ஆஸ்திரேலிய பிரதமர் உடனான சந்திப்பு குறித்து மோடி கூறியபோது, "சமீபகாலமாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவுகளுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. மால்கம் வருகையால் அது தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டு, புதிய மைல்கற்களை தொட்டுள்ளது" என்று கூறினார்.
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் பேசுகையில், "இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்" என்று கூறினார்