தண்ணீர் குடித்த தலித் இளைஞருக்கு அடி, உதை..! – ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!
ராஜஸ்தானில் பொதுப் பானையில் தண்ணீர் அருந்திய தலித் இளைஞரை பிற சாதியினர் அடித்து, உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதிய ரீதியான பாகுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என பல ஆண்டு காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போதும் கூட ஆங்காங்கே சமூகரீதியான தீண்டாமை தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் உள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொதுமக்கள் தண்ணீர் அருந்துவதற்காக பானை ஒன்று வைக்கப்பட்டிருந்துள்ளது. அங்கு வந்த தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக மிகுதியால் அந்த பானையில் தண்ணீர் எடுத்து குடித்துள்ளார்.
இதை கண்ட அங்கிருந்த பிற சமூகத்தினர் அந்த இளைஞரை வசவு சொற்களால் திட்டியதுடன், அங்கிருந்த இரும்புக் கம்பி மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் பூஜை பொருட்களை தொட்டு விட்டதாக தலித் சிறுவன் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு அடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.