வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (15:12 IST)

இறந்த மாடுகளின் உடல்களை எடுக்க மறுப்பு : தலித் சிறுவனுக்கு அடி உதை

அஹமதாபாத்தில் இறந்த மாடுகளின் உடல்களை அகற்ற மறுத்த தலித் ஒருவரின் 15 வயது மகனை அடித்து உதைத்ததை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

 
குஜராத் மாநிலம் அஹமதாபாத் மாவட்டத்திலுள்ள பவத்தா என்ற கிராமத்தில் இறந்து போன மாடுகளின் உடல்களை அகற்ற வேண்டும் என்று அந்த கிராமத்தின் ஆதிக்க சாதியினர் தினேஷ் பார்மர் என்ற தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
 
தினேஷ் பார்மர் மறுக்கவே அவரின் கண் முன்னரே அவரின் 15வயது மகனை அடித்து உதைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தினேஷின் மகனை அடித்து துன்புறுத்திய அந்த கிராமத்தை சேர்ந்த இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஏற்கெனவே குஜராத்தில் உனா நகரில் இறந்து போன மாட்டின் தோலை உரித்ததற்காக நான்கு இளைஞர்கள் கொடூரமாக அடித்து நொறுக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு தலித் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
 
பசு உங்கள் தாய் என்றால் பசு இறந்து போனால் அதன் உடலை நீங்களே அகற்றுங்கள் என்று கூறி தலித் மக்கள் இறந்த விலங்குகளின் உடல்களை அகற்ற மறுத்து பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே பவத்தாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.