ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (17:46 IST)

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் செப்.3 வரை நீட்டிப்பு.!!

மதுபான கொள்கை ஊழல்  வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை வழக்குக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ம் தேதி ஜாமீன் வழங்கியது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ஜூன் 21-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் ரத்து உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார். 

பின்னர் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ ஜூன் 26-ம் தேதி கைது செய்தது. அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் ஜூலை 11-ம் தேதி உச்ச நீதின்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

 
இந்நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி வாயிலாக அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.