விஞ்ஞான முறையில் ஊழல்..! பாஜக மீது நாராயணசாமி புகார்..!!
தேர்தல் பத்திரம் விவகாரத்தில் விஞ்ஞான முறையில் பாஜக ஊழல் செய்துள்ளது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டிய விவரம் உச்ச நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதில் ரூ.6 ஆயிரம் கோடி பாஜக நன்கொடையாக பெற்றுள்ளது என்றும் ஊழலே செய்யாத கட்சி என கூறிக்கொள்ளும் பாஜக விஞ்ஞான முறையில் ஊழல் செய்துள்ளது என்றும் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
லாட்டரி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ரூ.1,300 கோடி வரை நன்கொடை பத்திரத்தை பாஜகவுக்கு அளித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அமலாக்கத் துறை சோதனை செய்த 3 நாட்களில் இந்த தொகை பாஜகவுக்கு சென்றிருக்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஒப்பந்தங்களை எடுக்கும் நிறுவனம் ரூ.1,100 கோடி நன்கொடை அளித்துள்ளது என்றும் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறை ஆகியவற்றை வைத்து மிரட்டி பாஜக நன்கொடை பத்திரம் பெற்றிருக்கிறது என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது நரேந்திர மோடி அரசின் இமாலய ஊழல் என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார்.