மே 3 Lockdown ends... மே 4 முதல் நாடு எப்படி இருக்கும்?
மே 4 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு இரண்டாம் கட்டமாக மே 3 வரை ஊரடங்கு பிறப்பித்தது. மே 3 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்கும்படி மாநில முதல்வர்கள் கோரியதாக தெரிகிறது. ஆம், ஊரடங்கை மே 16 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற இருப்பதாக தெரிவித்தது. மேலும், ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வு கொடுக்கலாமா என்பது பற்றி மே 3 ஆம் தேதிக்கு பின் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் கூறியதாக தகவல் தெரிவித்தன.
ஏற்கனவே, கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கவும், பாதிப்பு அல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகிய நிலையில், மே 4 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊரடங்கு தொடர்பாக விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பின்னர் நல்ல முன்னேற்றம் உள்ளது. மே மாதம் 4 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்.
பல மாவட்டங்களில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இது தொடர்பாக விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.