திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (12:42 IST)

3வது அணி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்காது - அகமது படேல்

மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஒரு போதும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் கூறியுள்ளார்.
இது குறித்து அகமது படேல் கூறியதாவது:–
 
"மத்தியில் ஆட்சி அமைக்க 3வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்று சில தலைவர்கள் தெரிவித்தது அவர்களது சொந்த கருத்தாகும். காங்கிரஸ் தலைமையிடம் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. செய்தித்தாள்களில் இதுகுறித்து வெளியான தகவல்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.
 
இதுவரை நடந்துள்ள 6 சுற்று தேர்தலுக்கு பிறகு காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற தகவல் வந்துள்ளது. எனவே தேர்தலில் எங்களுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே ஆட்சி அமைக்கும்.
 
நாடெங்கும் மோடி அலை வீசுவதாக சொல்வது வெறும் மாயை. மோடி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்வார். அடுத்த புதிய ஆட்சி எப்படி இருக்கும் என்பதை சோனியாதான் தீர்மானிப்பார்". இவ்வாறு அகமது படேல் கூறியுள்ளார்.
 
காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங்கும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கிடையே 3வது அணியை காங்கிரஸ் நிச்சயம் ஆதரிக்கும். அதில் மாற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உள்பட சில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். எனவே காங்கிரஸ் 3வது அணியை ஆதரிக்குமா என்ற விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறது.