1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (12:17 IST)

காங். கமிட்டிகளை இழுத்து மூடி விடலாமா? ப.சி.க்கு நறுக் கேள்வி!!

P Chidambaram and Sharmistha Mukherjee

பாஜக தோற்கடிக்கப்பட்டதற்கு ப.சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்திருப்பது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது. 
 
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து வரும் 16 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். 
 
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தன்னுடைய டிவிட்டரின் நேற்று, ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவை தோற்கடித்துள்ளனர். 
 
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி. அவர் கூறியதாவது, பாஜகவை தோற்கடிக்கும் பணியை, மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் வழங்கியுள்ளதா? 
 
காங்கிரசின் மோசமான தோல்விக்கான காரணத்தை ஆராய்வதை விட்டு விட்டு காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு பாராட்டு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.  மாநில கட்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என்றால் மாநில காங்கிரஸ் கமிட்டிக்களை கலைத்துவிடலாமா? என்றும் ப.சிதம்பரத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார். 
 
காங்கிரஸ் ஒரு இடத்தை கூட கைப்பற்றாத நிலையிலும் கவலை ஏதுமின்றி, பாஜக தோற்கடிக்கப்பட்டதற்கு ப.சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்திருப்பது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.