டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி
டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2100 வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், டெல்லியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி ரூ.2100 மகளிருக்கு உதவித்தொகை வழங்குவோம் என்று கூறிய நிலையில், ரூ.400 அதிகமாக வழங்குவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், "டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். புதிய அமைச்சரவையின் முதல் நாளில் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.2500 வழங்கும் திட்டத்தை செயல்படுவோம்" என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளும் மகளிர் உதவித்தொகையை அறிவித்துள்ளன. இதனால், பாஜகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran