1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2024 (16:29 IST)

முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை நினைவூட்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..! பிரதமர் மோடி விமர்சனம்..!

Modi
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை நினைவூட்டுகிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,   பாஜக மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது என்றார். 

இதற்கு மிகப்பெரிய காரணம் பாஜக அரசியலை பின்பற்றாமல் தேசிய கொள்கையை பின்பற்றுவதுதான் என்றும் பாஜகவைப் பொறுத்தவரை, தேசமே முதன்மையானது என்றும் அவர் கூறினார். 
 
தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் சமாஸ்வாதி கட்சிகள் வேட்பாளர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதாகவும், சில இடங்களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடாமல் பின் வாங்குவதாக கூறினார்.
 
நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். 

 
அயோத்தி ராமர் கோவில், பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட அரசின் சாதனைகளையும் அவர் விவரித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.