இனிமேல் வாக்காளர் அட்டையை பொதுமக்களே திருத்தலாம்: வருகிறது புதிய ஆப்
வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி உள்பட ஒருசில மாற்றங்கள் செய்ய இதுவரை பொதுமக்கள் மிகுந்த அடைந்தனர். இதனை கணக்கில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் அடையாள அட்டையில் பொது மக்களே திருத்தம் செய்யும் வகையில் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர்களே தேவையான திருத்தங்களை இந்த ஆப் மூலம் செய்து கொள்ளலாம்
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘எலக்ட்ரானிக் ரோல்ஸ் சர்வீஸ் நெட்’’ என்ற ஆப் மூலம் வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையில் பெயர், முகவரியை பதிவு செய்வது மற்றும் மாற்றம் செய்வதை இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். இந்த திட்டம், தற்போது தேர்தல் முடிந்துள்ள குஜராத், இமாச்சல பிரதேசம் நீங்கலாக 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இவ்வாண்டு ஜூன் முதல் அமலுக்கு வருகிறது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள மேகாலயா, கர்நாடகா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
வாக்காளர் அட்டையில் மாற்றம் செய்யும் ஒவ்வொரு பதிவும் ஒ.டி.பி. மூலம் வாக்காளர் செல்போன் எண்ணுக்கு தகவல் வரும். மாற்றம் செய்யப்பட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டு பழைய விவரங்கள் அழிக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட அடையாள அட்டை வாக்காளர் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய ஆன்லைன் திருத்தம் மேற்கொள்ள இந்தியா முழுவதும் 7,500 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்' என்று கூறினார். தேர்தல் அதிகாரியின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.