சமையல் எண்ணெய் விலை ரூ.10 குறைவு? – மத்திய அரசு வலியுறுத்தல்!
இந்தியா முழுவதும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் சமையல் எண்ணெய் வகைகள் விலை உயரத் தொடங்கியது. இந்தியா 60% சமையல் எண்ணெய்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எண்ணெய் விலையை உயர்த்தின.
தற்போது உலகளாவிய சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் அதற்கு நிகரான அளவு எண்ணெய் விலை குறைக்கப்படவில்லை. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய உணவு செயலாளர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அதில் இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் எண்ணெய் விலையை ஒரே மாதிரியான விலையில் விற்க அறிவுறுத்தப்பட்டதுடன், சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளதை கணக்கிட்டு இந்தியாவிலும் ரூ.10 வரை விலையை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒத்துக் கொண்டுள்ளதாகவும், வரும் வாரங்களில் விலை குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய்களின் விலை குறைந்தால் மற்ற எண்ணெய்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.