பதறவைத்த பெய்ரூட் சம்பவம்; உஷாரான மத்திய அரசு! – துறைமுகங்களில் சோதனை!
Prasanth Karthick|
Last Modified வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (09:34 IST)
உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய பெய்ரூட் அம்மோனியம் நைட்ரேட் விபத்தை தொடர்ந்து இந்திய துறைமுகங்களில் சோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் அந்த நகரமே சிதைந்து காணப்படுகிறது. 70 பேருக்கும் மேல் உயிரிழந்த நிலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் அம்மோனியம் நைட்ரேட் இருப்பது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிண்டி குடோனில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாகவும், விரைவில் அவை ஏலத்தில் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட் சம்பவத்தால் உஷாரான மத்திய அரசு நாடுதோறும் உள்ள துறைமுகங்கள், குடோன்களில் சோதனை செய்து அம்மோனியம் நைட்ரேட் இருப்பு குறித்த விவரங்களை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.