ஓட்டுநர் உரிமத்துக்கு படிப்பு அவசியமில்லை- மத்திய அரசு அறிவிப்பு
ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தது எட்டாம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை மாற்றியமைத்திருக்கிறது மத்திய அரசு.
கிராம புறங்களில் பலர் படிப்பறிவற்றவர்களாக இருந்தாலும் சிறு வயதிலேயே ஒட்டுநர்களுடன் பழகி, வண்டி ஓட்டி பயிற்சி பெற்று சிறந்த ஓட்டுநர்களாக இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு படிப்பு ஒரு தடையாக உள்ளது. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என மோட்டார் வாகன சட்டம் 1989 விதி 8ல் கூறப்பட்டுள்ளது.
இதனால் பல சிறந்த ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் பெற முடியாமல் கிராம புறங்களில் போலீஸ் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சிறிய ரக வாகனங்களை ஓட்டி வருகின்றனர். பல மக்கள் குறிப்பிட்ட அளவு படித்திருந்தாலும் அதற்கான மாற்று சான்றிதழ் போன்றவற்றை பெறாமல் இருப்பதும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதை பரிசீலித்த மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் பெற படிப்பு இனி அவசியமில்லை என்றும், சோதனை ஓட்டத்தின் போது நன்றாக ஓட்டினாலே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் எனவும் சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியற்ற ஏழை ஓட்டுநர்கள் மற்றும் அவர் குடும்பங்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.