முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஹூடா மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த 19 உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு ஹரியானாவின் குர்கான் மாவட்டத்திலுள்ள மானேசர், நவ்ரங்பூர் மற்றும் லாக்நவ்லா கிராமங்களில் சுமார் 400 ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து மிரட்டி பறிக்கப்பட்டது.
1500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலங்களை, கட்டடங்களை கட்டி விற்கும் தனியார் பில்டிங் முதலாளிகளும், அரசு அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து அபகரித்தனர். அரசு அதிகாரத்தையும், அரசு இயந்திரத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் முதல்வர் ஹூடா மற்றும் 19 அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.