1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (08:25 IST)

ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை: டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை தந்துள்ளதால் தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அவசர மனுவாக இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை வரவுள்ள நிலையில் சற்றுமுன் ப.சிதம்பரத்தின் டெல்லி இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
 
நேற்று இரவு ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் 2 மணி நேரம் அவகாசம் அளித்தும் ப.சிதம்பரம் ஆஜராகாததால் மீண்டும் டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் நேற்றைய முன் ஜாமீன் விசாரணை மனுவின்போது தனிநபர் சுதந்திரம் முக்கியமானது என்றாலும் எல்லாவற்றையும் விட சட்டம் முக்கியமானது என்றும், மிகப்பெரிய ஊழலின் ஒரு சிறு பகுதிதான் தற்போது வெளிவந்துள்ளதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று உச்சநீதிமன்றத்திற்கு ப.சிதம்பரம் வருகை தந்து தனது முன் ஜாமீன் மனுமீதான விசாரணை நடக்கும் தேதி, நேரத்தை அறிந்து கொண்டதாகவும், அதனையடுத்து அவர் வழக்கறிஞரை சந்திக்க சென்றதாகவும், அதன்பின் அவர் எங்கு சென்றார்? எங்கே தங்கியிருக்கின்றார் என்பது தெரியவில்லை என்றும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.