பானிபூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள்! உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!
பலரும் விரும்பி உண்ணும் பானிபூரியில் புற்றுநோய் ஆபத்தை விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக மக்கள் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள் பலவற்றில் கேடு விளைவிக்கும் செயற்கை ரசாயனங்கள் இருப்பது தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் நிறமிகளில் உள்ள ரசாயனம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் அது தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் தர சோதனை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகா முழுவதும் 260 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் 41 மாதிரிகள் புற்றுநோய் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும், 18 மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றதாக உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சமீப காலத்தில் பலரும் அன்றாடம் விரும்பி உண்ணும் பொருளாக பானிபூரி உள்ள நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K