1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (13:23 IST)

அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழு.! தமிழக அரசுக்கு 6 மாதம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்..!!

supremecourt
அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு 6 மாதம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
இந்து கோயில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழு அமைக்க கோரி இந்து தர்ம பரிஷத் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த விசாரனையின்போது மேல்முறையீடு மனு தொடர்பாக தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், தமிழகத்தில் சுமார் 37,145க்கும் மேற்பட்ட கோயில்களில் 18,806 கோயில்களில் அறங்காவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள 18,339 கோயில்களை நிர்வாகிக்கு அறங்காவலர் நியமன பணி துவங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 
இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முதலில் 3 மாதத்திற்கு அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம், 6 மாதத்திற்குள் அறங்காவலர் நியமனம் தொடர்பான பணிகளை முடிக்க வசதியாக தமிழக அரசுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் இந்த மனு மீதான விசாரணையை 6 மாதத்திற்கு ஒத்தி வைத்தது.