விவிபேட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..! தேர்தலில் முறைகேடு ஆதாரம் இல்லை..!உச்சநீதிமன்றம்...
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் கருவிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலில் அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட்டில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ்கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சிறிய கட்டுப்பாட்டு கருவி ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா அல்லது விவிபேட் இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா? ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கட்டுப்பாட்டு கருவியை ஒரே ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் ஓட்டுகளை ஏன் 60 நாட்கள் வரை பாதுகாப்பது இல்லை? மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களில் சீல் வைத்து பாதுகாக்கப்படுகின்றனவா? சின்னங்கள் பதிவேற்ற எத்தனை இயந்திரங்களை வைத்து உள்ளீர்கள் என சரமரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரியை பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர். அதன்படி, பிற்பகலில் ஆஜரான தொழில்நுட்ப அதிகாரி, அனைத்து சிறிய கட்டுப்பாட்டு கருவிகளும் ஒரு முறை மட்டுமே புரோகிராம் செய்ய முடியும் என்றும் அதை மாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
சின்னங்களை ஏற்றும் அலகுகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை ECIL 1400 அலகுகளையும், BHEL 3400 அலகுகளையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். விவிபேட், இவிஎம், கண்ட்ரோலர் ஆகிய மூன்றும் தனித்தனியாக புரோகிராம் செய்யப்பட்டது என்றும் தேர்தலுக்கு பிறகு மூன்று யூனிட்களுமே சீலிட்டு வைக்கப்படுகின்றன என்றும் தொழில்நுட்ப அதிகாரி விளக்கமளித்தார்.
மைக்ரோ சிப்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை என்பதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுவதை முழுமையாக ஏற்க முடியாது என மனுதாரர் தரப்பு வாதிடப்பட்டது. இருப்பினும் தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை என்றும் ஒரு அரசியல் அமைப்பான நீதிமன்றம், இன்னொரு அரசியல் அமைப்பான ஆணையத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் எனக்கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.