குஜராத், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம்.. அனைத்து தொகுதிகளும் பாஜகவிற்கே.. கருத்துக்கணிப்பு
பாராளுமன்ற தேர்தலுக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் யார் என்பது குறித்த கருத்து கணிப்புகளை அவ்வப்போது ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு குறித்த முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி பெறும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்றும் அதேபோல் ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நான்கு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும்பான்மையான தொகுதிகள் கிடைக்கும் என்றும் இந்த மாநிலங்களிலேயே அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைத்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றாலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஓரளவு வெற்றி கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.
Edited by Siva