1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2024 (13:36 IST)

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்..! மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை..!!

bjp meeting
பாஜகவின் இரண்டு நாள் தேசிய கவுன்சிலர் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதிலிருந்து 11,500 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
 
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றது. இதையொட்டி பாஜக இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. 
 
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மாநாடு தொடங்கி வைத்தனர். இன்று பிற்பகல் 3:00 மணிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உரையாற்ற இருக்கிறார். நாளை பிரதமர் மோடியின் உரையுடன் கவுன்சில் கூட்டம் மாநாடு நிறைவடைய உள்ளது. மக்களவைத் தேர்தல் குறித்தும், தேர்தலுக்கான பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிப்பார்கள் என தெரிகிறது.
 
delhi bjp
மேலும் இந்த கவுன்சில் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்று அரசியல் தொடர்பானதாகவும், மற்றொன்று பொருளாதாரம், சமூகம் மற்றும் ராமர் கோயில் தொடர்பான தலைப்புகளின் அடிப்படையிலும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

 
இந்த இரண்டு நாள் மாநாட்டில் பாஜக பொதுச் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அணித் தலைவர்கள், தேசிய செயற்குழு, தேசிய கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மக்களவை பொறுப்பாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் என மொத்தம் 11,500 பேர்  பங்கேற்றுள்ளனர்.