திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (19:59 IST)

பிரதமராக சாதனை படைத்த அடல் பிகாரி வாஜ்பாய்

காங்கிரஸ் கட்சியை சாராத 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமர் என்ற பெருமைக்குரிய அடல் பிகாரி வாஜ்பாய் இன்று காலமானார்.

 
டிசம்பர் 25, 1924ஆம் ஆண்டு குவாலியரில் பிறந்தார். அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். 1939ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இணைந்தார். 1947ஆம் ஆண்டு முழு நேர ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் ஆனார். 1951ஆம் ஆண்டு பாரதீய ஜன சங்கம் என்ற இந்து தேசியவாத வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார்.
 
1957ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பல்ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி வென்று ஆட்சியமைத்த போது வாஜ்பாய் வெளியுறதுவுத்துறை அமைச்சரானார். 
 
1980ஆம் ஆண்டு எல்.கே.அத்வானி, பேரோன் சிங் ஆகியோருடன் இணைந்து பாரதீய ஜனதா கட்சியை தோற்றுவித்தார். 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட வாஜ்பாய் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றார்.
 
ஆனால் இவரது ஆட்சி 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. 1998ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்றார். ஆனால் இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே ஆட்சி நீடித்தது. 1999ஆம் ஆண்டில்தான் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி பாஜகாவுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டது. இதனால் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது.
 
மீண்டும் அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாஜ்பாய் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பதவி ஏற்றார். இந்த முறை 5 ஆண்டுகள் நிறைவு செய்தார். காங்கிரஸ் கட்சியை சாராத 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். 
 
தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகிய குறிப்பிடத்தக்க திட்டங்கள் இவர் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்டன. சர்வதேச உறவுகளை மேம்படுத்துவது தனியார் நிறுவனங்கள் மற்றும் அந்நிய முதலீடு ஊக்குவிப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
 
1998ஆம் ஆண்டு போக்ரான் அணு குண்டு சோதனை நடத்தப்பட்டு. இதன்மூலம் இந்தியா வலிமையுடைய நாடு என்று உலக அரங்கிற்கு தெரிவிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றது. இதில் இந்தியா பாகிஸ்தான் படைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
 
2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு ஆகிய சம்பவங்கள் வாஜ்பாய் அரசுக்கு மட்டுமின்றி பாஜகவுக்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
 
2009ஆம் ஆண்டுக்கு பின் வாஜ்பாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது முதல் அவரது அரசியல் வாழ்க்கை முடங்கியது. கடந்த ஜூன் 11ஆம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை 5.10 மணிக்கு தனது 93 வயதில் காலமானார்.
 
இவரது மறைவுக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.