பற்றாக்குறையான நேரத்தில் வீணான தடுப்பூசிகள்?! – அசாமில் விசாரணைக்கு உத்தரவு!

Prasanth Karthick| Last Modified புதன், 20 ஜனவரி 2021 (17:56 IST)
நாடு முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அசாமில் ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் உறைந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை கடந்துவிட்ட நிலையில் அவசரநிலை மருந்தாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அசாமிற்கு 2,01,500 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 20,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அசாமில் உள்ள சிர்கார் மருத்துவ கல்லூரியில் சேமித்து வைக்கப்பட்ட தடுப்பூசிகளில் 1000 டோஸ்கள் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை சரியான குளிர்பதன நிலைக்கும் கீழான நிலையில் சேமித்து வைத்ததே உறைய காரணம் என கூறப்படுகிறது.

உறைந்த தடுப்பூசிகளின் செயல்திறனை சோதிக்க அவை மீண்டும் ஆய்வகம் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் தடுப்பூசிகளை முறையாக பராமரிக்காதது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நிலையில் 1000 டோஸ் தடுப்பூசிகள் அலட்சியமாக கையாளப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :