காங்கிரஸ் ஒரு தலையில்லா கோழி: அருண் ஜெட்லியின் கடைசி அரசியல் ட்வீட்
பாஜக முக்கிய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி இன்று காலமானார். இந்நிலையில் அவருடைய கடைசி அரசியல் ட்விட்டர் பதிவு இணையங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மக்களவையில் நிதியமைச்சராக பதவி வகித்தவர் அருண் ஜெட்லி. ஜி.எஸ்.டி உட்பட நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டியவர். ஆகஸ்டு 9 அன்று உடல்நிலை கோளாறால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி கொண்டே வந்த அருண் ஜெட்லி இன்று காலை இறைவனடி சேர்ந்தார். ஆகஸ்டு 9 அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஆகஸ்டு 7 ல் சுஷ்மா ஸ்வராஜ் இறப்பிற்கு தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.
ஆகஸ்டு 6ம் தேதியன்று அவர் எழுதிய ட்விட்டர் பதிவுதான் அவர் கடைசியாக எழுதிய அரசியல் பதிவு. அதில் காங்கிரஸை விமர்சித்திருந்த அவர் “காங்கிரஸ் இப்போது ஒரு தலை (தலைமை) இல்லாத கோழி. இந்திய மக்களிடமிருந்து அது அந்நியப்பட்டுவிட்டது. புதிய இந்தியா எப்போதோ உருவாகி விட்டது. ஆனால் காங்கிரஸ் மட்டும்தான் அதை இன்னும் உணராமல் இருக்கிறது. கட்சியை அதள பாதாளத்துக்கு கொண்டு செல்லும் போட்டியில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இது பாஜக மக்களவையில் முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகியவற்றிற்கான மசோதாக்களை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்தபோது எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.