அருண்ஜெட்லி உடல் இன்று தகனம்: யமுனை நதிக்கரையில் ஏற்பாடுகள் தீவிரம்
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பாஜக கட்சியின் மூத்த தலைவருமான அருண்ஜேட்லி நேற்று முன்தினம் காலமான நிலையில் இன்று மாலை 4 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
உடல்நலக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நேற்று முன்தினம் மதியம் காலமானார். அவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல பிரமுகர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பல வெளிநாட்டுத் தலைவர்களும் அருண்ஜெட்லி மறைவிற்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்தனர்
இந்த நிலையில் தற்போது டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அருண்ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று மாலை 4 மணிக்கு டெல்லி நிக்கோபார் காட் பகுதியில் யமுனை நதிக்கரையில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யமுனை நதிக்கரையில் அவரது உடல்தகனத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது