திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (15:10 IST)

லட்டு பிரியர்களுக்கு அல்வா குடுத்த இணையதளம்! – உஷாரான திருப்பதி தேவஸ்தானம்!

திருப்பதி லட்டை வீட்டுக்கே டெலிவரி செய்வதாக மோசடியில் ஈடுபட்ட இணையதளத்தை திருப்பதி தேவஸ்தானம் முடக்கியுள்ளது.

திருப்பதிக்கு மக்கள் வெங்கடாஜலபதியை தரிசிக்க செல்வதோடு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி லட்டு. திருப்பதி செல்பவர்களிடம் லட்டு வாங்கி வர சொல்லும் மக்கள் இன்றும் உள்ளனர். அப்படியிருக்க திருப்பதி லட்டை வீட்டிற்கே டெலிவரி செய்கிறோம் என விளம்பரப்படுத்தி ஏமாற்றியுள்ளது ஆன்லைன் தளம் ஒன்று.

இந்த தளத்தில் திருப்பதி தேவஸ்தான லட்டுகள் நேரடியாக உங்கள் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படும் என விளம்பரப்படுத்தியதுடன், ஆண்டுக்கு 5 ஆயிரம் செலுத்தினால் மாதம் 2 லட்டுகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என மாத, வருட ப்ரீமியம் ப்ளான்களை எல்லாம் அறிவித்துள்ளது அந்த இணைய தளம்.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில் திருப்பதிக்கு நேரில் வந்து தரிசனம் செய்பவர்களை தவிர வேறு யாருக்கும் லட்டு பிரசாதம் வழங்குவதில்லை என்று தெரிவித்ததோடு அந்த வலைதளத்தை முடக்கியுள்ளார்கள். அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணுக்கு அழைத்து பேசிய போது இணையதளத்தை பார்த்து கால் செய்பவர்களுக்கு பதில் சொல்வதற்காக மாதம் 15 ஆயிரம் ஒருவர் சம்பளம் தந்ததாகவும் மற்றபடி இணையதள அலுவலகம் எங்கு இருக்கிறது என்பது தனக்கு தெரியாது என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுபோன்று ஆன்லைன் மூலமாக லட்டு அனுப்புவதாக திருப்பதி தேவஸ்தானம் எந்த வசதியும் செய்திருக்கவில்லை என்றும், இதுபோன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.