1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (11:10 IST)

கல் வீசுனது அவங்க.. பழி எங்க மேலயா? – ஜே.பி.நட்டா கார் தாக்குதல், மம்தா ஆவேசம்!

மேற்கு வங்கம் சென்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கார் தாக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதை பாஜகவினரே செய்து கொண்டதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அடிக்கடி மோதல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மேற்கு வங்கத்தில் டைமண்ட் ஹார்பர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காரில் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்தவர்கள்தான் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த சம்பவம் பாஜக திட்டமிட்டு தனக்கு தானே நடத்தி கொண்டது என குற்றம் சாட்டியுள்ளார். இத்தனை பாதுகாப்பு அதிகாரிகளை மீறி கார் மீது எப்படி கல்வீச்சு நடந்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அவர் பாஜக கூட்டமே வராவிட்டாலும் சிலரை வைத்து வித்தை காட்டுவதாக சாடியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜே.பி.நட்டா “மம்தா ஜீ உண்மையை மறைக்க முயல்கிறார். மேற்கு வங்கத்தில் வன்முறை அராஜகம் உச்சத்தில் உள்ளது. மக்கள் ஆதரவை இழந்ததால் மம்தா ஜீ விரக்தியில் உள்ளார்” என கூறியுள்ளார்.