புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 ஜூன் 2019 (14:34 IST)

ஏரியில் மூழ்கிய இஞ்சீனியர்: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்

அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த இஞ்சீனியர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏரியில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ். தந்தை இரும்பு ஆலையில் வேலை பார்த்தாலும் தனது அயராத உழைப்பால் மகன் அவினாஷை அமெரிக்காவின் மெக்ஸிகோ பல்கலைகழகத்தில் படிக்க வைத்தார். படிப்பு முடிந்த அவினாஷ் அங்கேயே வேலை கிடைத்ததால் சில வருடங்களாக அமெரிக்காவிலேயே பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக வெளியில் சென்றுள்ளார். ஒரு ஏரிப்பகுதிக்கு சென்றவர்கள் அங்கு ஒரு படகை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஏரியின் நடுவே சென்றிருக்கிறார்கள். அங்கே பிறந்தநாளை கொண்டாடியபோது தண்ணீரில் டைவ் செய்திருக்கிறார் அவினாஷ். ரொம்ப நேரமாகியும் திரும்ப வராததால் நண்பர்கள் சிலர் குதித்து தேடியிருக்கிறார்கள். அவினாஷ் ஏரியின் ஆழத்தில் உள்ள வேர்களில் கால் சிக்கி மீள முடியாமல் தவித்திருக்கிறார். நண்பர்கள் முடிந்தளவு அந்த வேர்களை அகற்றி அவரை காப்பாற்ற முயன்றிருக்கின்றனர். ஆனால் மூச்சு விட முடியாமல் திணறிய அவினாஷ் சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அமெரிக்க காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் அவினாஷின் உடலை ஏரியிலிருந்து மீட்டார்கள். பிறகு சட்டப்படி அவரது உடல் அவரது பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலைக்கு வெளிநாடு சென்ற மகன் பிணமாய் திரும்ப வந்திருப்பது பெற்றோரை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.