யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாம் சிலை
யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாம் சிலை திறக்கப்பட்டது. வெளிநாட்டில் கலாமுக்கு திறக்கப்பட்ட முதல் சிலை இதுவாகும்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2012-ம் ஆண்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு முதன் முறையாக சென்றார். அப்போது அவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புயலை தாண்டினால் தென்றல் என்ற தலைப்பில் பேசினார்.
2015-ம் ஆண்டு கொழும்புக்கு அப்துல் கலாம் சென்றார். அதுவே அவருக்கு தன்னுடைய வாழ்நாளில் கடைசி வெளிநாடு பயணமாக அமைந்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்துல் கலாம் மறைந்தார். அவருடைய மறைவுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் ஆயிரக்கணக்கானோர் அனுதாபம் தெரிவித்து இருந்தனர். தற்போது இலங்கை வட மாகாணங்களில் அப்துல் கலாம் பெயரில் இளைஞர் சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக இந்திய தூதரகம் சார்பில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அப்துல் கலாமின் சிலை நிறுவப்பட்டது. இதனை இந்திய தூதர் ஒய்.கே.சின்கா, வட மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.