ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (17:40 IST)

அழுகிய நிலையில் வீட்டுக்குள் கிடந்த தாயும் மகனும் – மும்பையை உலுக்கிய சோக சம்பவம்

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தாயும், மகனும் உடல் அழுகி இறந்து கிடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர். இவரது தாய் மீனாட்சி. தனக்கு மும்பையில் வேலை கிடைத்ததால் தனது அம்மாவுடன் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார் வெங்கடேஸ்வர். கடந்த சில வருடங்களாக அங்கே உள்ள பிரபல ஐடி கம்பெனியில் பணி புரிந்தவர் தன் தாயையும் அன்போடு கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களாக வெங்கடேஸ்வர் வீடு மூடியபடியே இருந்துள்ளது. அவருடைய தாயாரையும் யாரும் பார்க்கவில்லை. சொந்த ஊருக்கு போயிருப்பார்கள் என அக்கம் பக்கத்தினர் நினைத்து கொண்டு இருந்துவிட்டனர். சில நாட்கள் கழித்து ஒரு துர்நாற்றம் குடியிருப்பு பகுதிகளில் வீச தொடங்கியுள்ளது. அது எங்கிருந்து வீசுகிறது என பார்த்தபோது வெங்கடேஸ்வரின் வீட்டுக்குள்ளிருந்து வீசுவது தெரிந்தது.

உடனே மூக்கை பொத்தி கொண்டு கதவை உடைத்து உள்ளே போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ஹாலில் தாய், மகன் இருவரும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். எதனால் அவர்கள் இப்படி கொடூரமாக இறந்து போனார்கள் என்று துப்பு துலக்கியபோது வெங்கடேஸ்வர் லாப்டாப்பில் “எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை” என்று டைப் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து விசாரித்ததில் வெங்கடேஸ்வர் சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்ததும், வீட்டு வாடகை கட்டாததால் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொன்னதும் தெரிய வந்தது. இதில் விரக்தியடைந்து தனது தாய்க்கு விஷம் கொடுத்து, தானும் இறந்திருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மும்பை பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.