மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்..! – சீல் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகள் முன்னதாக பாபர் மசூதி வழக்கில் அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அதுபோல பல பகுதிகளில் கோவில்கள் இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் நிலவி வருகின்றன.
அவற்றில் வாரணாசி ஞானவாபி மசூதி சர்ச்சையும் ஒன்று. வாரணாசியில் உள்ள இந்த மசூதி முகலாயர் காலத்தில் கட்டப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததாகவும், ஔரங்கசீப் காலத்தில் அதை இடித்து அங்கு ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும் தொடர்ந்து பேச்சு நிலவி வருகிறது.
இதுகுறித்து மசூதியில் ஆய்வு நடத்த வேண்டும் என வாரணாசி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் தேவையான ஆய்வுகளை நடத்த அனுமதி அளித்துள்ளது.
அதன்படி மசூதி பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டு இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நேற்று அப்பகுதியில் சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை சீல் வைக்குமாறும், பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்லாதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் மாவட்ட ஆட்சியருக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க மசூதி சுற்று வட்டார பகுதிகளில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.