1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (10:13 IST)

காவலரை கார் ஏற்றிக் கொன்ற செம்மரக்கடத்தல் கும்பல்! ஆந்திராவில் அட்டூழியம்!

ஆந்திராவில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவலரை கடத்தல் கும்பல் கார் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திராவில் காடுகளில் செம்மரங்களை வெட்டிக் கடத்துவது சமீப காலமாக பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்காக ஆந்திர காவல்துறை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு என புதிய பிரிவையே ஏற்படுத்தி கடத்தல்க்காரர்களை தீவிரமாக ஒடுக்கி வருகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கே.வி.பள்ளி செக் போஸ்ட்டில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் கணேஷ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது செம்மரக்கட்டைகளை காரில் கொண்டு வந்த கும்பல் ஒன்று கணேஷ் மீது காரை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காவலர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பியோடிய கும்பலை சேஸ் செய்து சென்ற போலீஸார் அவர்களை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த 2 பேர் பிடிபட்ட நிலையில் 3 பேர் தப்பியோடியுள்ளனர். விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கார் மற்றும் 7 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ள போலீஸார் தப்பியோடிய நபர்களை பிடிக்கவும் விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர்.

Edit by Prasanth.K