வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:07 IST)

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை அமைக்கவும் விநாயகர் ஊர்வலம் நடத்தவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக நடத்தி நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை செய்து அரசாணை ஒன்றை பிறப்பித்தது
 
இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் நடைபெற்ற போது பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்கவும் விநாயகர் ஊர்வலம் வைக்கவும் தடைசெய்யும் அரசின் ஆணை செல்லும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தனிநபர்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் மெரினா கடற்கரை தவிர மற்ற நீர்நிலைகளில் பொது மக்கள் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது 
 
இந்த நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டில் பொது இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை விதித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
 
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் ராமசாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பதும் இந்த மனுவை அவசரமாக பட்டியலிட கோரி அவர் தரப்பினர் முயற்சி செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
விடிந்தால் விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் அவசர வழக்காக இரவோடு இரவாக இந்த மனு விசாரிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்