வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (07:23 IST)

9 பொதுத்துறை வங்கிகள் மூடப்படுகிறதா? ரிசர்வ் வங்கி விளக்கம்

சமீபத்தில் ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும்  வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒன்பது பொதுத்துறை வங்கிகளின் பெயர்களை குறிப்பிட்டு இந்த வங்கிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. இதனால் அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள், அந்த வங்கியின் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
 
 
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த 9 பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மூடப்படுவதாக கூறப்பட்ட அந்த வங்கிகள் பெரும்பாலானவை இதர வங்கிகளுடன் இணைக்கப்பட்டவை என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார், இத்தகைய வதந்திகள் விஷமத்தனமானவை என்றும், பொதுமக்கள் யாரும் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த பெரிய அளவுக்கு நிதியை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நுகர்வோர்களுக்கு சிறந்த சேவை வழங்கவும், பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தவே சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
 
முன்னதாக நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத் துறை வங்கிகளை, லாபத்துடன் இயங்கி வரும் மற்ற பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து மத்திய அரசு கடந்த மாதம் நடவடிக்கை மேற்கொண்டது. அதையடுத்து பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கிகளில் பணத்தை எடுக்கும் அளவில் ரிசர்வ் வங்கி அண்மையில் கட்டுப்பாடு விதித்தது. இந்த கட்டுப்பாட்டால், லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்தனர். இந்நிலையில், 9 பொதுத் துறை வங்கிகள் மூடப்படவுள்ளன என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது