வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (09:17 IST)

செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது: தமிழகத்தை அடுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் 5 மாநிலங்கள்

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என மத்திய மனித வளத்துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் யுபிசி தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், விடுதிகள் ஆகியவை தற்காலிகமாக கொரோனா விடுதியாக மாற்றப்பட்டுள்ளதாக செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த முடியாது என தமிழகம் ஏற்கனவே போர்க்கொடி தூக்கியது. மேலும் தேர்வுகள் நடத்த வேண்டுமா? அல்லது ரத்து செய்ய வேண்டுமா? என்பது குறித்த முடிவை எடுக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார் 
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து டெல்லி, ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது என்று போர்க்கொடி தூக்கி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
ஆனால் இதுகுறித்து மனித வளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த வேண்டும் என்று கூறவில்லை என்றும், மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் உள்ள சூழ்நிலையில் அட்டவணையை உருவாக்கி நடத்திக் கொள்ளலாம் என்றும் ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ தேர்வு நடத்தலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது
 
மேலும் பல்கலைக்கழக மற்றும் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்றும் மனிதவளத்துறை அமைச்சகம் உறுதிபடக் கூறி உள்ளது. மனித வளத்துறை அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு மாநில அரசுகள் கட்டப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்