வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:40 IST)

மத்திய கல்வி நிறுவனங்களில் 58,000 காலி பணிகள்! – விரைவில் நிரப்பப்படுகிறது!

மத்திய கல்வி நிறுவனங்களான கேந்த்ரிய வித்யாலயா, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள் 58 ஆயிரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான கேந்த்ரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் மற்றும் மத்திய உயர் கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளது.

இதுகுறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அளிக்கப்பட்ட ஒரு பதிலில், கேந்த்ரிய வித்யாலயாவில் 12,099 ஆசிரியர் பணியிடங்களும், 1,312 ஆசிரியரல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல ஐஐடி-களில் 4,423 ஆசிரியர் பணி காலியிடங்களும், 5,052 ஆசிரியரல்லாத பணியிடங்களும் காலியாக இருப்பதாகவும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் 1,050 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் 6,180 ஆசிரியர் பணியிடங்களும், 15,798 ஆசிரியரல்லாத காலி பணியிடங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மொத்தமாக 58,000த்திற்கும் அதிகமாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அந்தந்த கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K